10 பிப்ரவரி, 2011

வாயில்லா ஜீவன்

திரையரங்க நெரிசலில்
திடீரெனப் புகுந்த பசு
கணக்கற்றோரைக் குத்திக்
காயப்படுத்தியதாகச் செய்தி...

பாவம் என்ன செய்யும்
பசுதானே அது...
பேச மட்டும் தெரிந்திருந்தால்
வன்முறையில் இறங்காமல்
வாய் திறந்திருக்கும் இப்படி...

“எத்தனைதான் மடியை நான்
ஏறக்கட்டிக் கொண்டாலும்
சொட்டுகூடக் கன்றுக்கின்றி
ஒட்டக்கறந்து விடுகிறீர்கள்... சரி
என்பிள்ளைக்குத்தான்
எட்டவில்லை
எவர் பிள்ளைக்காவதுகூட
பசியைப் போக்கப்
பயன்படுத்தாமல்
பாவிகளே இப்படி
“கட் அவுட்” படத்தின் மேல்
கவிழ்க்கிறீர்களே”- என்று
வாய் பேசத்தெரிந்திருந்தால்
வன்முறை செய்திருக்காதுதான்...

பாவம் என்ன செய்யும்
பசுதானே அது!

24 ஜூலை, 2010

தடங்கல்களின் தடங்கள்



தடங்கல்கள்...அவை

தடைகளல்ல ,

பயணப்படிக்கட்டுக்களில்

பாதங்களை உள்வாங்கும்

பள்ளங்களிலிருந்து -தன்

உள்ளங்கைகளால்

உயர்த்திப்பிடிக்கும்

உதவும் கரங்கள்.


சோர்வும் துயரமும்

சேர்ந்தழுத்தும்போது

தோழமை ரத்தங்களே

தூரமாகிப் போனாலும்

தடங்கல்கள்தான்

குதிரையின் குளம்பொலியோடு

போட்டியிட்டு

பாயப் பழக்குகிறது மனதை


தொடரும் தோல்விகளால்

ரத்தத்திலும் மனதிலும்

அழுத்தம் அதிகமாகும் போது

தடங்கல்கள்

நம்முள் உறங்கும்

போராட்டக் குணத்தை

உயிர்த்தெழச் செய்து

உற்சாகக் குளியலில்

நித்தமும் நம்மை

நீராட்டுகிறது !


நடுவிரலின் வளர்ச்சிகண்டு

பொறாமையில் பொசுங்கும்

கட்டை விரலின்

கவலை போல

யதார்த்த வளர்ச்சியைக்கூட

கண்டு பொறுக்காத சில

செயற்கைத் தடங்கல்கள்

கால ஓட்டத்தில்

காணாமற் போகும் ... எனவே

தடங்கல்களை

வாழ்க்கையின் வாசலில் நின்று

வரவேற்போம் ...


போர்க்குண நெருப்பில்

புடம் போடப்பட்ட நம்

வாழ்வின் அடையாளங்களை

வருங்காலத் தலைமுறைக்குப்

படம்போட்டுக் காட்டுவன

இந்த

தடங்கல்களின்
தடங்கள்கள்தான்!.

29 ஜூன், 2010

முதுமைக்காதல்

முதுமைக்காதல்

இத்தனை ஆண்டுக்கால
இல்லறச் ச(சு)கவாசத்தில்
எத்தனையோ முறை
முயன்றிருக்கிறேன்
அவள் மீதான என்
ஆழமான அன்பினை அவள்
உள்மனம் உணரச் சொல்லிவிட...
ஆனால் என்ன செய்ய
ஒவ்வொரு முறை
முயலும்போதும் அவளது
அளப்பரிய அன்பின்
விஸ்வரூபத்தில்
வாயடைத்துப்போய்விடுவதால்
ஒருமுறைகூட சொன்னதுமில்லை...
அவளும் எதிர்பார்த்ததுமில்லை.

23 ஜூன், 2010

பூக்கள்

பூமித் தாவரங்களின்
பிரசவ காலப்
புன்னகை !

கிளைகளில் குவிந்த
வான வில்லின்
வசீகரம் !

மகரந்தக் கூடத்தில்
தேன் தயாரிக்கும்
மலர்த் தொழிற்சாலை !

ஈக்களை எதிர்பார்த்துப்
பரிமாறப்பட்ட
பந்தி!

அழகுக்கெல்லாம் ஆயுள்
அற்பம் என்பதை
உணர்த்தும் உன்னதம் !

விஷச்செடியானாலும்
விளைகிறது இங்கே
சுவைத்தேன் !

வாழ்வுக்கும் சாவுக்கும்
வேறுபாடில்லாத
விற்பனை!

(எனது "பூட்டுகள்" நூலிலிருந்து )

சிங்கப்பூரிலும் சாதி.




சிங்கப்பூரிலும் சாதி!


விரதமிருந்து வென்றுவருகிறேன் -என்
விடலைப்பருவ சபலநாட்களை இந்த
வெள்ளித்தீவிலும்.....

ஆடையைச் சுமையாய் என்னும்
அழகிகளைச் சாலையில்
அடிக்கடி கடக்கும்போதும்...

பெரிய திரையிலும்
சின்னத்திரையிலும்
கட்டிலறையில் கணினித்திரையிலும்
ஆபாசங்கள் திரை விரிக்கும்போதும்...

இன்னும் எத்தனையோ
வண்ண வண்ண வசீகரங்கள்
சபலநரம்புகளுக்கு
சாப்பாடு போடக்
கூப்பிடும்போதும்
விரதமிருந்து
வென்று காட்டவும்
காத்திருக்கும் காதலிக்காக
கற்பைப் பாதுகாத்துவைக்கவும்
காரணமாயிருக்கிற
அந்த மந்திரம்,
“மேலைக்கலாசாரத்தில்
விழுந்துவிடாமல்
சிங்கப்பூரிலும் சாதி” என்று தந்தை
சொல்லியனுப்பிய சேதிதான்.

21 ஜூன், 2010

வெண்பாக்கள்

குறள் வெண்பா

நெடிய மனக்கவலை,நீடித்த சோகம்
வடியக் கவிதை வடி.


சிந்தியல் வெண்பா

தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை- வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

நேரிசை வெண்பா

மாமியார் வீடின்றி வாழ்வை அனுபவிக்க
சாமியார் வாழ்வே சரியென்று-தாமிருந்த
மோனத் தவநிலையில் மோகத்தீ மூளவிட்டோர்
காணவேண்டும் வெஞ்சிறையில் காப்பு.

இன்னிசை வெண்பா

ஈழத்தின் ஏக்கம் இதயமெலாம் சூழ்ந்திருக்க
வாழத் தலைப்பட்ட வள்ளியம்மைத் தாய்போன்றோர்
நீர்வழியும் கண்களொடு நீர்வழியும் வான்வழியும்
பார்முழுதும் வேர்விட்டார் பார்.

19 ஜூன், 2010

செடிகள்


மரங்களின் வீர்யத்தை
நிச்சயிக்கும்
இயற்கை எக்ஸ்ரே !

பூமித்தாயின் முகத்தில்
முளைத்த பச்சைப் பருக்கள் !

மண்கோழி அடைகாத்த
விதை முட்டையை
உடைத்துக்
கிளர்ந்தெழுந்த
தாவரக் குஞ்சு !

மரங்கள்
மரபுக் கவிதையென்றால்
செடிக்கவிதை ஓர் ஹைக்கு !

பூமித்தாயை விட்டு
உயரே வளர
ஆசைப்படாத
அம்மா பிள்ளைகள் !

(எனது "பூட்டுகள்" கவிதை நூலிலிருந்து )

12 மார்ச், 2010

பக்தி....?

ஆண்மை அடக்கிடவே ஆண்மையற்ற சாமியார்
ஆன்மா அடக்குவதாய் "அள்ளிவிட்ட"_ வீண்பொய்யை
நம்பியே ஏமாந்தோர் நம்பும் பழமொழி ,
"வெம்பிப் பழுத்தபக்தி வீண்".

21 பிப்ரவரி, 2010

கவிமாலை

அன்பழகன், ஆ,இளங்கோ, இக்பால், முல்லை
ஆசிரியர் சித்தார்த்தன், சபா.ரா போன்ற
என்பெங்கும் தமிழுணர்வு கொண்டோர் கூடி
இயக்குகிற கவிமாலை, கவிதை ஆலை.

29 அக்டோபர், 2009

நூல்

அறிவை
அடைகாக்கும்
காகிதக் கோழி !

புரட்டப் புரட்டப்
புதையல் திறக்கும்
சுரபி !

ஆறாம் அறிவுக்குத்
தீனி சுரக்கும்
அஃறினை !

நூல்
ஞான மூலதனத்தால்
நடத்தப்படுகிற
"வரிகள் " நிறைந்த
வணிகம்
இந்த வணிகத்தில்
இலக்கிய தரமிருந்தால்
நட்டக்கணக்கு மட்டுமே
நடப்பு நிதி நிலவரம் !

(எனது நிழல்மடி நூலிலிருந்து)


01 செப்டம்பர், 2009

குழந்தை...

பொம்மையைக் கண்டாலே
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி .

இதழிடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர் .

மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு .

தங்கக் கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடரியாத வெண்மனம் .

ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல் .

(எனது "நிழல் மடி " நூலிலிருந்து)

31 ஆகஸ்ட், 2009

கடல்


கருமியின் கைப்பணமாய்ப்
பருக பயன்படாத
திரவ விரயம் .
*
அலைபுகை வெளியிடும்
அசைவ உணவு
தொழிற்சாலை .
*
சந்ததியைப் பறிகொடுத்த
கடல் மீன்களின்
கண்ணீர் தேசம்.
*
"முதலை " இழந்தாலும்
முழ்கிபோகாத
இயற்கை வங்கி .
*
(எனது நிழல் மடி புத்தகத்திலிருந்து )

27 ஆகஸ்ட், 2009

தண்ணீர்

உலகின் திரவ உயிர்மூச்சு ! நாளை
கலகம் பிறந்துசுடு காடாய் - உலகழிய
நீரே கரணியமாய் நிற்குமெனில் ஈரமன
நீரே"தீ" யாகும் நிகழ்வு.

24 ஆகஸ்ட், 2009

எலிச் சொடுக்கலில் ...

மூடிய வலக்கையின்

எலிச் சொடுக்கலில்

உயிர்க்கிறாய் வண்ணமயமாய் !

@

எத்தனை செலவு செய்தாலும்

எட்டமுடியாத தூரங்களையும்

பார்வைக்குப்

பந்தி வைக்கிறாய் .

@

தொலைதேச மைதானத்தில்

உதைப்படும் பந்துகளையும்

கைதொடும் தூரத்தில்

காட்டி மிரட்டுகிறாய் !

@

பிசிராந்தையார் காலநட்பை

முகம் பார்த்து

முன் மொழியவும்

இன கவர்ச்சி காட்டி

வழிமொழியவும் கூட

வலைவிரிக்கிறாய்.

@

திரைத்துறை ஜாம்பவான்கள்

எத்தனை போராடினாலும்

ஓசையில்லாமல்

புதிய படங்களைக் கூட

திரை இறக்கம்

செய்து தருகிறாய் !

@

அறைக்குள் திரைவிரிக்கும்

வண்ணக் கணினியே

உன்னை எண்ணி

பரவசத்தை விடவும்

பரிதாபமே மேலிடுகிறது ...

அடுத்து வருகிற எந்த

அறிவியல் கண்டுபிடிப்பு உன்னை

எடுத்தெரியப் போகிறதோ என்ற

இரக்கத்தால் !

22 ஆகஸ்ட், 2009

பொரு"ளாதாரம்"

உணர்ச்சிப் பெருக்கால்
கொந்தளித்துவிட்டார் -பாரத
உள்துறை அமைச்சர் !
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்யப் போவதாகவும்
அறிவித்திருக்கிறார் ...
*
இத்தனை பெரிய பதவிலிருப்பவரை
இரத்தம் கொதிக்கவைத்த அந்த
ஆத்திர சம்பவம் எது ?
*
படிக்கவும் பிழைக்கவும் போன
பலப்பல தேசங்களில்
உதைபடுகிற இந்தியர்கள் பற்றிய
உணர்ச்சிக் கொந்தளிப்பா ?
*
எரிவாயுவும் எண்ணெய்விலையும்
ஏறி ஏறியே இந்திய மக்களை
நசுக்குகிறதே என்ற வேதனைக்கு
உலகளாவிய தீர்வு காணும்
உந்துதலா ?
*
முள்வேலிக் கமிபிக்கிடையே
முடங்கிக் கிடக்கிற
மூன்று லச்சம் தமிழர்களின்
எதிர்காலம் பற்றிய
எழுந்த ஆத்திரமா ?
*
பொறுங்கள் இந்திய நாட்டுப்
பொதுமக்களே ...பொறுங்கள் ...
*
உலகின் மிகப் பெரிய
ஜனநாயக நாட்டின்
உள்துறை அமைச்சரை
உணர்ச்சி வசப்பட வைத்த
சம்பவம் எது தெரியுமா ?
*
அமெரிக்க விமான நிலைய
அதிகாரிகள்
சோதனை என்ற பெயரில்
இரண்டு மணி நேரம்
காத்திருக்க வைத்துவிட்டார்களாம்
நடிகர் ஷாருக்கானை ...
*
அமெரிக்க அரசிடம்
புகார் செய்ய
அமைச்சருக்குதான் எத்தனை
அவசியமான பிரச்சனை என்று
எண்ணி எண்ணியே
இறுமாந்து போகின்றன
இந்திய இதயங்கள் ...
*
பாரத மாதா கீ ஜே!
பாலிவுட் பிதாவுக்கு ... ம்ம்..ஜே !!

21 ஆகஸ்ட், 2009

புலமைப் புதிர்


முன்னிரண்டின் கையில் முடிவிரண்டும் நாசந்தான்
பின்னிரண்டும் பாவாகும்! பேசாத - அன்னமே
ஊரறிந்த தில்லை; உயர்ந்தோரே கூடுமது
நேரத்தைச் சுட்டும் நிகழ்வு !

19 ஆகஸ்ட், 2009

நூல் வெளியீட்டு விழா!

ஆர்ப்பாட்டமான
அழைப்பிதழ் ...
வரவேற்புரை ...
வாழ்த்துரை ...
அணிந்துரை ...
ஆய்வுரை ...
ஏற்புரை என்று
எந்தவிதமான
சம்பிரதாயச்
சடங்குகளுமின்றி
நடந்து முடிந்தது
நூல் வெளியீட்டு விழா ...
*
செழுமையாக
விம்மி வெடித்தது
செடியில் பருத்தி .

13 ஆகஸ்ட், 2009

யாப்பியல்


அப்பாவை அப்பாவை அப்பாவைப் பாவகையுள்
எப்பா வகையென்றே ஈர்வதென்றாள் _ அப்பாவும்
யாப்பியல் கற்றிடுநீ; யாண்டும் கவியியலில்
மூப்பாயென் றாரே முனைந்து.

பண்பாடு


உலகமயமாதலின்
உச்சத்தில்
சுருங்கிப் போயின
உலகமும் உடைகளும்
*
உடைகளின் கண்ணியம்
உடைக்கப்பட்டதால்
எதிர்காலத்தில் வருமோ
20 கிராம் தங்கமும்
25 கிராம் மேலாடையும்
எடுக்கும் சூழல் ?

10 ஆகஸ்ட், 2009

விதி

சாலை விதிகளை
காலால் மிதித்தபடி
சிவப்பு விளக்கு
விழுந்தபின் ஓடினான்
ஓடும்போதே விழுந்தான்
ஆயிரம் மைல்களுக்கும் அப்பால்
அறுந்து விழுந்தது -எனக்கு
அறிமுகம் இல்லாத
ஒரு தங்கையின் தாலி !
*
மீறியது சாலை விதி !
மாறியது தலை விதி !!